Friday, 14 August 2015

Sri Devi Karumariamman True History



ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருவேற்காட்டில் தோன்றிய வரலாற்றைக் கூற அருளிய அன்னைக்குக் கோடி நமஸ்காரங்கள் :-


19 நூற்றாண்டின் முதல் பகுதியில், அதாவது 1809 ம் ஆண்டில், பழந்தண்டலத்தில் வாழ்ந்த வந்த வயதான திருமதி. அலமேலு அம்மாள், ஒரு சமயம் அடுக்கி வைத்திருந்த விரட்டியை எடுக்கச் சென்றபோது, விரட்டியிலிருந்த "கருநாகப் பாம்பு" தீண்டி திருமதி. அலமேலு அம்மாளின் உயிர் சிவலோகம் அடைந்து விடுகிறது. மறுநாள் திருமதி. அலமேலு அம்மாளின் உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு கொண்டுச் செல்லும்போது, மயானக்காட்டை சென்றுச்சேருவதற்கு முன்பாகவே, சிவலோகம் சென்ற உயிர், மீண்டும் திருமதி. அலமேலு அம்மாளின் உடலை அடைந்து உயிர் பெற்று எழுந்துள்ளார்கள்.


உயிர் பெற்று எழுந்த வயதான திருமதி. அலமேலு அம்மாவை பார்த்து, உறைவினர்கள் மற்றும் கிராம மக்கள் பயந்து நின்றார்கள். பயந்து நின்ற மக்களை நோக்கி, திருமதி. அலமேலு அம்மாளின் முடிமீது எழுந்தருளிய மருள் உரைத்த வாக்கு, "வந்துள்ளது யார் என்று அறியும் திறமை உங்களுக்கு இல்லை" என்றும், "என்னுடைய இந்த தோற்றத்தைக் கண்டும் உங்களால் அறிய முடியாது" என்றும், தொடர்ந்து அன்னை அருளிய வாக்கு, "மாரியம்மன் வந்துள்ளதாக உரைத்த அன்னை, "கருநாகமாக உருமாறி வந்ததால், இன்றுமுதல் "கருமாரி" என என் நாமாம் விளங்கட்டும்" என்றும், இம்முடியை தொடர்ந்து, "இருபத்தொரு தலைமுறைக்கு வாக்கு உரைத்து அனைத்து மக்களைக் காப்பேன்" என்று வாக்கு உரைத்துள்ளால் தேவி கருமாரியம்மன். இதனைத் தொடந்து ஒவ்வொரு ஆண்டும் கருமாரியம்மனின் வாக்கின்படி, மருளாளர் திருமதி. அலமேலு அம்மாள் (முதல் தலைமுறை) ஸ்வாமிகள் திருமுடிமீது எழுந்தருளி, தன்னைத் தஞ்சம் அடைந்த ஊர் மக்களுக்கும், பொது மக்களுக்கும் வாக்கு உரைத்து, குறைகளைத் தீர்த்து காத்து வாந்துள்ளால் அன்னை கருமாரி. ில ஆண்டுகள் சென்றபின், மருளாளர் திருமதி. அலமேலு அம்மாள் ஸ்வாமிகள் கருமாரி அம்மனின் திருவடியை அடைகிறார்கள். கருமாரியம்மனின் வாக்கின்படி, தெய்வதிருமதி. அலமேலு அம்மாளின் இளைய மகனாகிய திரு. பாளையம் முடிமீது எழுந்தருளினால் தேவி கருமாரியம்மன், அதன்பிறகு மருளாளர் திரு. பாளையம் ஸ்வாமிகளின் திருமுடிமீது குடிக்கொண்டுத் தன்னைத் தஞ்சம் அடைந்த மக்களுக்கும், நாடி வந்த மக்களுக்கும் குறி உரைத்து காத்து வந்துள்ளால் அன்னை கருமாரி.


  சுமார் 19 ம் ஆண்டு நூற்றாண்டின் முதல் பகுதியில் (சுமார் 1815 - 1818), மருளாளர் திரு. பாளையம் (இரண்டாம் தலைமுறை) ஸ்வாமிகளுக்கு திருமணம் நடைப்பெறுகிறது.  மருளாளர் திரு. பாளையம் ஸ்வாமிகள் திருமணம் செய்துக்கொண்ட அம்மையாரின் ஊர்தான் "வேலங்காடு". அப்போதைய "வேலங்காடு" என்ற பெயர் மருவி "வேற்காடு" ன்று அழைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு "வேற்காடு" வேதபுரீஸ்வரர் அருளாள் "திரு" இணைத்து "திருவேற்காடு" ன்று பெயர் பெற்றுள்ளது. இவ்வாறாக  மருளாளர் திரு. பாளையம் ஸ்வாமிகள், தான் திருமணம் செய்துக்கொண்ட அம்மையாரின் ஊரான திருவேற்காட்டை வந்தடைகிறார்கள்.


அந்நாளில், திருவேற்காட்டில் குறிப்பிடத்தக்க வகையில் இருந்த இரண்டு கோவில்களில் முதலாவது, ஊரின் எல்லையை காக்கும் அம்மனாக விளங்கிய எல்லையம்மன் கோவிலும், இரண்டாவது, மிகவும் தொன்மை வாய்ந்த புராதன கோவிலான வேதபுரீஸ்வரர் கோவிலாகும். இந்த எல்லையம்மன் கோவில், வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தின் இடது புறத்தில் இருந்தது என்று ஊர் மக்கள் கூறுகின்றனர். வேதபுரீஸ்வரர் கோவில் இரண்டு முக்கிய புராதன நிகழ்வுகளைக் கொண்டது. ஒன்று, சப்தரிஷி முனிவரான அகத்தியர்க்கு சிவபெருமான் திருமணக் கோலமாகக் காட்சித் தந்தத் திருத்தலம். அதனால் தான் இத்திருத்தலத்தில் மட்டும் சிவபெருமான் அன்னை பார்வதியுடன் திருமணக் கோலமாகக் காட்சி அளிக்கிறார். இத்திருதலத்தில் மகாமுனியான அகத்தியர்க்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இத்தலத்திற்கு வடவேதாரண்யம் என்றும் பெயர் உண்டு. இரண்டாவது, அன்னை பார்வதி தன் மகனான முருகப்பெருமானுக்கு வேல் தந்தது இத்திருதலத்தில் தான். இதற்கு சான்றாக வேலாயுதத் தீர்த்தம் இத்திருதலத்தின் பின்புறம் உள்ளது. எல்லையம்மன் கோவில், தற்போது ஐய்யப்ப ஸ்வாமிகள் கோவிலுள்ள இடத்தில் தான் இருந்தது என்று ஊர் மக்கள் கூறுகின்றனர்.


       திருவேற்காடு எல்லையம்மன் கோவிலில், முதன் முதலில் மருளாளர் திரு. பாளையம் ஸ்வாமிகள் திருமுடியில் எழுந்தருளிய கருமாரியம்மன், தன்னைப் பணிந்தவர்களுக்கும், தன்னை நாடி வந்தவர்களுக்கும் வாக்கு உரைத்தும், பல அற்புதங்களை நிகழ்த்தியும், குறைகளைத் தீர்த்தும், வரங்களை அளித்தும் காத்து வந்தாள் அன்னை கருமாரி. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் திருவேற்காட்டினிலேயே முதன் முதலில் குறி உரைத்தவர் மருளாளர் திரு. பாளையம் ஸ்வாமிகள் தான். (இதற்கு சான்று ஊர் வரலாறு தெரிந்த அவ்வூர் யாதவ தெரு மக்கள்). அன்னை கருமாரி மருளாளர் திரு. பாளையம் ஸ்வாமிகள் திருமுடியில் எழுந்தருளிய, குறி உரைக்கும் செய்தி ஊர் மக்களிடையே பரவியது. அதன்பிறகு ஊரெங்கும் பரவி கருமாரியம்மனின் புகழ் ஓங்கி ஒலித்தது, மக்கள் திராண்டு வந்து அன்னையின் அருளைப் பெற்று பயனடைந்தார்கள். பல ஆண்டுகள் சென்றபின் மருளாளர் திரு. பாளையம் ஸ்வாமிகளுக்கும் ஊர் கோவில் நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்ட மனகசப்புக் காரணமாக, திருவேற்காடு எல்லையம்மன் கோவிலில் மருளாளர் திரு. பாளையம் ஸ்வாமிகள் குறி உரைப்பதை நிறுத்திவிட்டார். அதன்பின்பு பக்தர்களின் வேண்டுகோளின்படியும், 19 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் பகுதியில், மருளாளர் திரு. பாளையம் ஸ்வாமிகள் திருவேற்காட்டின் எல்லையை விட்டு வெளியேறி, அருகிலிருந்த கம்மார்பாளையம் (வேலப்பன்சாவடி) என்று அழைக்கப்படும் பெருமாளகரத்தில் உள்ள ஊர் மக்களின் வேண்டுகோளின்படியும், அவ்வூரிலுள்ள எட்டி மரத்தடியில், மருளாளர் திரு. பாளையம் ஸ்வாமிகள் திருமுடியில் எழுந்தருளிய கருமாரியம்மன், தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு குறி உரைத்து காத்து வந்துள்ளால் அன்னை கருமாரி.

பெருமாளகரத்திலுள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆதின ஆலயத்திலுள்ள எட்டிமரம். இம்மரத்திற்கு வயது 300 ஆண்டுகளாம்.    

மருளாளர் திரு. பாளையம் ஸ்வாமிகளின் மனதில் தோன்றிய உருவத்தினை ஒரு கூழவரிடம் சொல்லி, பானையுடன் அம்மனின் திருமுகத்தை இனைத்து உருவாக்கியதுதான் "கரகம்". அதன்பிறகு பெருமாளகரத்தில் (வேலப்பன்சாவடியில்) கூரை வேய்ந்த கோவில் அமைத்து முதன் முதலில் கருமாரியம்மனுக்கு உருவமாக "ஏழு கரகங்கள்" பிரதிஷ்டை செய்தவர் மருளாளர் திரு. பாளையம் ஸ்வாமிகள். தற்போது ஒவ்வொரு கருமாரியம்மனின் திருவுருவப் படத்தில் வலது புறத்தில் பானையுடன் முகம் அமைய பெற்று மற்றும் வேப்பிலையுடன் காட்சி அளிக்கிறதே அதுதான் "கரகம்". இதன் பொருள் கருமாரியம்மனின் ஆதி உருவம் "கரகம்" என்பதுதான்.
இப்படத்தில் கருமாரியம்மனின் ஆதி உருவமானக்
                                     கரகத்தினைக் காணலாம்.

இவ்வாலயத்தில் மருளாளர் திரு. பாளையம் ஸ்வாமிகளின் திருமுடிமீது எழுந்தருளிய கருமாரியம்மன், பல பல அற்புதங்களை நிகழ்த்தி, மக்களுக்கு குறி உரைத்து காத்து வந்துள்ளால் அன்னை கருமாரி. இவ்வாறாக பல ஆண்டுகள் சென்றுள்ளது. மருளாளர் திரு. பாளையம் ஸ்வாமிகளின் வயது மூப்பின் காரணமாக கருமாரியம்மனின் திருவடிகளை அடைகிறார்கள். மருளாளர் திரு. பாளையம் ஸ்வாமிகள் 120 ஆண்டுகள் மேல் வழ்ந்ததாகக் கூறப்படுகிறது.  இப்போதும் திருவேற்காட்டில் மருளாளர் திரு. பாளையம் ஸ்வாமிகள் முதன் முதலில் குறி உரைத்த இடத்தில் அன்னை கருமாரி, ஆதி கருமாரியம்மனாக விளங்குகிறாள்.


       மருளாளர் தெய்வதிரு. பாளையம் ஸ்வாமிகளின் தலைமுறைக்கு பின்பு இரண்டு தலைமுறைகளாக உருவாகிறது. இதற்கு காரணம் மருளாளர் தெய்வதிரு. பாளையம் ஸ்வாமிகளுக்கு இரண்டு மனைவிமார்கள் இருந்திருக்கிறார்கள். இதில் முதல் மனைவிக்கு முதல் 10 மகள்களும் கடைசி 2 மகன்களும், இரண்டாம் மனைவிக்கு முதல் 10 மகன்களும், கடைசி 2 மகள்களும் வாரிசுகளாக இருந்திருக்கிறார்கள்.

     

        கருமாரியம்மனின் வாக்கின்படி, மருளாளர் தெய்வதிரு. பாளையம் ஸ்வாமிகளுக்கு பிறகு இரண்டு தலைமுறையில் முதல் தலைமுறை வழியாக, முதல் மனைவியின் கடைகோடி, 12வது மகனாகிய திரு. ராஜீ (மூன்றாம் தலைமுறை) அவர்களின் திருமுடிமீது எழுந்தருளினால் தேவி கருமாரியம்மன். இத்தலைமுறையை அன்னை கருமாரி விரும்பி ஆட்கொண்டாளாம். இண்டாவது தலைமுறை வழியாக, இண்டாவது மனைவியின் மூத்த மகனாகிய திரு. தம்பு (மூன்றாம் தலைமுறை) அவர்களின் திருமுடிமீது எழுந்தருளினால் தேவி கருமாரியம்மன். இத்தலைமுறை அன்னை கருமாரியை விரும்பி ஆட்கொண்டனராம். இந்த இரண்டு தலைமுறையில் எழுந்தருளிய அன்னை கருமாரியம்மன், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு குறி உரைத்து காத்து வந்துள்ளால் அன்னை கருமாரி.


      மருளாளர் தெய்வதிரு. பாளையம் ஸ்வாமிகளுக்கு பிறகு, பெருமாளகரத்தில் மருளாளர் திரு. தம்பு ஸ்வாமிகள் (மூன்றாம் தலைமுறை) திருமுடிமீது கருமாரியம்மன் எழுந்தருளி, தன்னை நாடி வந்த மக்களுக்கு குறி உரைத்து காத்து வந்துள்ளால் தேவி கருமாரியம்மன். அதே சமயம், அந்நாளில் மருளாளர் திரு. ராஜீ ஸ்வாமிகள் (மூன்றாம் தலைமுறை), வேதபுரீஸ்வரர் கோவிலின் வலதுபுறம் இருந்த மாந்தோப்பில் கூரை வேய்ந்த கோவில் அமைத்து கருமாரியம்மனுக்கு உருவமாக "ஏழு கரகங்கள்" பிரதிஷ்டை செய்து, மருளாளர் திரு. ராஜீ ஸ்வாமிகளின் திருமுடிமீது எழுந்தருளிய அன்னை கருமாரி, தன்னைத் தஞ்சமடைந்த அனைத்து மக்களுக்கும் குறி உரைத்து மக்களைக் காத்து வந்துள்ளால் அன்னை கருமாரி.


      பெருமாளகரத்தில் மருளாளர் திரு. தம்பு ஸ்வாமிகள் திருமுடிமீது கருமாரியம்மன் எழுந்தருளி, தன்னை நாடி வந்த மக்களுக்கு குறி உரைத்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து கிராம சேர்ந்த் பல பேர் கம்பு, அரிவாள், கத்தியுடன் வந்து பக்தர்களை தாக்க முயன்றுள்ளனர்கள். மருளாளர் திரு. தம்பு ஸ்வாமிகள் திருமுடிமீது குடிகொண்டிருந்த அன்னை கருமாரி, தன் பூசாரியிடம், "என் மகன் காத்தவராயனை அழைக்கும்படி பணித்தாள்".  அவ்வாரே பூசாரிகள், அய்யன் காத்தவராயனை அழைத்துள்ளனர். மருளாளர் திரு. தம்பு ஸ்வாமிகள் திருமுடிமீது எழுந்தருளிய அய்யன் காத்தவராயன், திருநீர்தட்டிருந்த திருநீரை எடுத்து வடகிழக்கு திசையை நோக்கி வீசியவுடன், அந்த வடகிழக்கு திசையிலிருந்து வந்த சூறாவளி காற்றில் சிக்கி சில பேர் இறந்துவிட்டார்களாம். சிலர் கொண்டுவந்த கத்தி, கம்பு, அரிவாள்களை போட்டுவிட்டு, உயிர் தப்பினால் போதும் என்று ஓடிவிட்டார்களாம். இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் பக்தர்களுக்கு ஒருவருக்கும் ஒரு பாதிப்பும்
இல்லை என்பதுதான். இதற்கு சான்று இக்கோவில் வரலாறு தெரிந்த பெருமாளகரம் ஊர் மக்கள்.

 

        சில ஆண்டுகள் சென்ற பிறகு, மருளாளர் திரு. தம்பு ஸ்வாமிகளுக்கும் கோவில் நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்ப்பட்ட சிறிய மனகசப்பின் காரணமாக, மருளாளர் திரு. தம்பு ஸ்வாமிகள் திருமுடிமீது எழுந்தருளிய கருமாரியம்மன், மீண்டும் கம்வார்பாளைத்திலிருந்து சூலத்தை எடுத்துக்கொண்டு திருவேற்காட்டை நோக்கி சென்று, தற்போது பெரிய கோவில் இருக்கும் இடத்தில் சூலத்தை நாட்டினாள் என்று, திருவேற்காடு வரலாறு தெரிந்த ஊர் மக்ககள் கூறுக்கின்றனர்கள்.  அந்த இடத்தில் கோவில் அமைத்து கருமாரியம்மனின் ஆதி உருவமான "கரகங்கள்" பிரதிஷ்டை செய்து மருளாளர் திரு. தம்பு ஸ்வாமிகள் திருமுடிமீது எழுந்தருளிய கருமாரியம்மன், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு குறி உரைத்து காத்து வந்தாள் அன்னை கருமாரி. அதன்பின்பு கருமாரியம்மனை முழு உருவமாக படம் வரைந்து முதன் முதலில் வெளியிட்டவர் மருளாளர் திரு. தம்பு ஸ்வாமிகள் தான்.
                                          முதன் முதலில் கருமாரியம்மனுக்கு
                           உருவமாக வரையப்பட்டப் படம்.


அந்நாளில் மருளாளர் திரு. தம்பு ஸ்வாமிகள் உருவாக்கிய கோவில் தான் தற்போது ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருகோவிலாக விளங்குகிறது. இதற்கு சான்று, இப்போதும் மருளாளர் திரு. தம்பு ஸ்வாமிகளின் உருவப்படமும், மருளாளர் திரு. பரமானந்தம் ஸ்வாமிகளின் உருவப்படமும் இத்திருகோவிலில் வைக்கப்பட்டுள்ளது. மருளாளர் திரு. தம்பு ஸ்வாமிகளின் சமாதி இத்திருகோவிலின் வலதுபுறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவில் குறிமேடையாக இருந்ததற்கு அடையாளமாக இப்போதும் இரண்டு மேடைகள் கருவறைகும் பலிபிடத்திற்கும் இடையே அமைந்திருப்பதைக் காணலாம். மருளாளர் திரு. தம்பு ஸ்வாமிகளுக்கு உதவியாளராக இருந்தவர் தான் திரு. ராமதாஸ் அவர்கள். திரு. ராமதாஸ் அவர்களுக்கும் இந்தத் தலைமுறைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.


      இவ்வாறாக மருளாளர் திரு. தம்பு ஸ்வாமிகள் திருவேற்காட்டிற்கு சென்றபிறகு, பெருமாளகரத்திலுள்ள மக்களின் வேண்டுகோலினை ஏற்று, மருளாளர் திரு. ராஜீ ஸ்வாமிகள் மாந்தோப்பை விட்டு, பெருமாளகரத்திலுள்ள (வேலப்பன்சாவடியிலுள்ள) கருமாரியம்மன் கோவிலை வந்தடைகிறார். அதன்பிறகு ஒவ்வொரு வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மருளாளர் திரு. ராஜீ ஸ்வாமிகளின் திருமுடிமீது எழுந்தருளிய அன்னை கருமாரி, தன்னை நாடி வந்த மக்களுக்கு குறைகளைத் தீர்த்தும், வரங்கள் தந்தும் காத்து வந்துள்ளால் தேவி கருமாரி.

       

ஒருசமயம் அன்னை கருமாரி, மருளாளர் திரு. தம்பு ஸ்வாமிகளின் திருமுடியிலிருந்து விலகி நின்றாளாம். மற்றும் மருளாளர் திரு. தம்பு ஸ்வாமிகளின் கண் பார்வையும் குறைந்தும் சரியாக பார்க்க முடியாமலும் அவதியுற்றறாம். பலமுறை மருளாளர் திரு. தம்பு ஸ்வாமிகளின் திருமுடியில் அன்னை கருமாரியை அழைத்தார்காளாம். ஆனால் அன்னை கருமாரி வரவில்லையாம். இவ்வாறாக பல மாதங்கள் சென்றுள்ளது. அதன்பின்னர் பெருமாளகரத்திலுள்ள (வேலப்பன்சாவடியிலுள்ள) கருமாரியம்மன் கோவிலில், மருளாளர் திரு. ராஜீ ஸ்வாமிகளின் திருமுடிமீது எழுந்தருளிய அன்னை கருமாரியம்மனிடம் மருளாளர் திரு. தம்பு சுவாமிகளின் உதவியாளாரான திரு. ராமதாஸ் மற்றும் சிலர் வந்து, "ஏன்னம்மா அந்த பாலகன் முடியில் வரவில்லை" என்று கேட்டார்களாம், அதற்கு அன்னை அருளிய வாக்கு, " என் முடிபாலகனாக இருந்தாலும், தவறு செய்தால் தண்டனை அனுபவித்துதான் ஆகவேண்டும்". என்று உரைத்த அன்னை கருமாரியிடம், "இதற்கு என்னம்மா தீர்வு?," என்று  கேட்டார்களாம். அதற்கு அன்னை உரைத்த வாக்கு, "பாலகன், நான் உரைக்கும் பரிகாரங்கள் செய்யட்டும், அதன்பிறகு நான் அந்த முடியில் வருவேன்," என்று உரைத்தாள் அன்னை கருமாரி. அன்னை உரைத்த வாக்கின்படி பரிகாரங்கள் செய்தபிறகு, மருளாளர் திரு. தம்பு ஸ்வாமிகள் திருமுடிமீது எழுந்தருளிய கருமாரியம்மன், எப்பொழுதும்போல் தன்னை நாடி வந்த மக்களுக்கு குறி உரைத்தாளாம் தேவி கருமாரி. மருளாளர் திரு. தம்பு ஸ்வாமிகளின் கண் பார்வை குறையும் விலகி தெளிவாக தெரிந்ததாம். இவ்வாறாக பல ஆண்டுகள், மருளாளர் திரு. தம்பு ஸ்வாமிகள் திருமுடிமீது எழுந்தருளிய கருமாரியம்மன் திருவேற்காட்டிலும், மருளாளர் திரு. ராஜீ ஸ்வாமிகளின் திருமுடிமீது எழுந்தருளிய அன்னை கருமாரியம்மன் வேலப்பன்சாவடியிலும், தன்னை நாடி வந்த மக்களுக்கு குறைகளைத் தீர்த்தும், வரங்கள் தந்தும் காத்து வந்துள்ளால் தேவி கருமாரி.


1954 ஆம் ஆண்டு மருளாளர் திரு. ராஜீ ஸ்வாமிகள் (மூன்றாம் தலைமுறை) அன்னை கருமாரியம்மனின் திருவடிகளை அடைகிறார்கள். மருளாளர் திரு. ராஜீ ஸ்வாமிகளுக்கும் திருமதி. விஷலாட்சி அம்மையாருக்கும் 1941 ஆம் ஆண்டு பிறந்த மகன், திரு. தேவானந்தம் அவர்கள். மருளாளர் திரு. ராஜீ ஸ்வாமிகள் அன்னை கருமாரியம்மனின் திருவடிகளை அடையும்போது, திரு. தேவானந்தம் அவர்களுக்கு வயது பதிமூன்று. கருமாரியம்மனின் எண்ணம் என்ன என்று அறியமுடியாத நிலையிலும், ஏன் என்றும், எதற்கு என்றும், சிறிய வயது காரணமோ என்று அறியமுடியாத வகையில்,  மருளாளர் தெய்வதிரு. பாளையம் ஸ்வாமிகளின் 11வது மகனுமான, மருளாளர் திரு. ராஜீ ஸ்வாமிகளின் அண்ணனுமான திரு. மாணிக்கம் (மூன்றாம் தலைமுறை) திருமுடிமீது எழுந்தருளினால் அன்னை கருமாரி. எழுந்தருளிய அன்னை கருமாரி உரைத்த முதல் வாக்கு, "இந்த முடியில் ஓர் ஆண்டு மட்டுமே" என்று வாக்கு உரைத்துள்ளால் தேவி கருமாரி.


1955 ஆம் ஆண்டு மருளாளர் திரு. தம்பு ஸ்வாமிகள் வயதுமூப்பின் காரணத்தால் அன்னை கருமாரியம்மனின் திருவடிகளை அடைகிறார்கள். அதன்பின்பு மருளாளர் தெய்வதிரு. தம்பு ஸ்வாமிகளின் மகனான திரு. பரமானந்தம் திருமுடியில் எழுந்தருளினால் அன்னை கருமாரி. தற்போது ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருகோவிலில் (பெரிய கோவில்) மருளாளர் திரு. பரமானந்தம் ஸ்வாமிகளின் (நான்காம் தலைமுறை) திருமுடிமீது எழுந்தருளிய அன்னை கருமாரியம்மன், தன்னை நாடி வந்த மக்களுக்கு குறி உரைத்து காத்து வந்துள்ளால் அன்னை கருமாரி.


       வேலப்பன்சாவடியில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவிலில், மருளாளர் திரு. மாணிக்கம் ஸ்வாமிகளின் திருமுடிமீது எழுந்தருளி, மக்களுக்கு குறிமேடையில் நின்று, தன்னை தஞ்சமடைந்த மக்களை குறி உரைத்து காத்து வந்துள்ளால் அன்னை கருமாரி. ஆறு மாதங்கள் சென்ற பிறகு, மருளாளர் திரு. மாணிக்கம் ஸ்வாமிகளுக்கு உடல்நிலை குறைவினால் கை, கால்கள் விழுந்து விடுகிறது. இந்நிலையில் அன்னை கருமாரியம்மன், ஓர் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளால், அது என்னவென்றால் கை, கால்கள் விழுந்தபோதும், அன்னை கருமாரி மருளாளர் திரு. மாணிக்கம் ஸ்வாமிகளின் திருமுடிமீது எழுந்தருளும் போது மட்டும் கை, கால்கள் இயங்கும், நிற்க முடியும். தன்னை நாடி வந்த அனைத்து மக்களுக்கும் குறி உரைத்து நின்றுள்ளால் தேவி கருமாரி. அன்னை கருமாரி மருளாளர் திரு. மாணிக்கம் ஸ்வாமிகளின் திருமுடியிலிருந்து மலையெரினால், மறுபடியும் கை, கால்கள் விழுந்துவிடுமாம். இவ்வாறாக  மருளாளர் திரு. மாணிக்கம் ஸ்வாமிகள் ஆறு மாதங்கள் படுக்கையிலும், அன்னை கருமாரி எழுந்தருளும்போது மட்டும் மேடையின்மீது நின்றும், தன்னை தஞ்சமடைந்த மக்களுக்கு குறி உரைத்து காத்து வந்துள்ளால் அன்னை கருமாரி.

1955 ஆம் ஆண்டு மருளாளர் திரு. மாணிக்கம் ஸ்வாமிகள் அன்னை கருமாரியம்மனின் திருவடிகளை அடைகிறார்கள். மருளாளர் தெய்வதிரு. பாளையம் ஸ்வாமிகளின் (இரண்டாம் தலைமுறை) தலைமுறையின், வாரிசும் மகனுமான மருளாளர் தெய்வதிரு. ராஜீ ஸ்வாமிகளின் (மூன்றாம் தலைமுறை) வாரிசும் மகனுமான திரு. தேவானந்தம் (நான்காம் தலைமுறை) திருமுடியில் எழுந்தருளினால் அன்னை தேவி கருமாரி. அப்போது அவரது வயது பதினான்கு. கலியுகத்தெய்வமான கருமாரியம்மன் மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகளின் திருமுடிமீது எழுந்தருளி, மக்களுக்கு குறிமேடையில் நின்று, தன்னை தஞ்சமடைந்த அனைத்து மக்களையும் குறி உரைத்து காத்து வருகிறாள் அன்னை கருமாரி.




வேலப்பன்சாவடி, தற்போது பெருமாளகரம், ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆதின ஆலயம்.


1955 ஆம் ஆண்டு முதல், மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகளின் திருமுடிமீது குடிகொண்டு நிகழ்த்திய அற்புதங்களும், அதிசயங்களும் நிறைய உண்டு. 1959 ஆம் ஆண்டு, ஒரு சமயம் வேலப்பன்சாவடியில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவிலில் தன்னை நாடி வந்த மக்களுக்கு குறி உரைத்து கொண்டிருந்தபோது, சற்று நேரம் மௌனமாக நின்ற அன்னை கருமாரியம்மன் உரைத்த வாக்கு, "தன் முடிபாலகனின் தலை வெடித்து சிதறும் வகையில் தீய யாகம் செய்கிறார்கள் என்று எடுத்து உரைத்த அன்னை கருமாரி, தன் முடிபாலகனின் தலையைக் காக்கத் தன் தலையை தருவதாகக் கூறி, கருவறையை நோக்கி தன் கரத்தை நீட்டினாள், கருவறையிருந்த ஏழு கரகங்களில் நடு கரகத்தின் தலை தானாக உடைந்து கீழே விழுந்ததாம். அதன்பின்னர் கருமாரியம்மன் உரைத்த வாக்கு, "இருந்தாலும் என் சொரூபத்தை காண்பீர்" என்று, உடைந்த கரகத்திலிருந்து "கருநாகவடிவில்" அம்மா படமெடுத்து நின்றாளாம். அதன்பின்னர் கருநாகவடிவில் வந்த அம்மா கரகத்திருந்து இறங்கி வந்து கருவறையின் வாசலில் படமெடுத்து நின்றாளாம். மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகளின் திருமுடிமீது எழுந்தருளிய அன்னை கருமாரி, உத்தரவு கொடுத்தவுடன் கருநாகவடிவில் வந்த அம்மா மீண்டும் கருவறையை நோக்கி சென்று, மறைந்து சென்றாளாம் அன்னை கருமாரி. இதற்கு சான்று, அன்று கோவிலில் கருவறையின் பூசாரியாக இருந்த திரு. அப்புவு அவர்களும், திரு. ஆண்டி முதலியார் அவர்களும் மற்றும் இக்கோவில் வரலாறு தெரிந்த ஊர் மக்கள் மற்றும் அன்று குறி கேட்க வந்த பக்தர்கள். இக்கோவிலில் மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகளின் திருமுடிமீது எழுந்தருளிய அன்னை கருமாரியம்மனிடம் குறி கேட்பதற்காக சுமார் ஒவ்வொரு வாரத்திலும் சுமார் மூன்றாயிரம் மேற்பட்ட பக்தர்கள் வந்து குறி கேட்டுப்பயனடைந்துள்ளார்களாம்.


        ஒரு சமயம், ஓர் பெண் தனது மகபேறு காலம் கடந்த நேரத்தில் வந்து, மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகளின்  திருமுடிமீது எழுந்தருளிய அன்னை கருமாரியிடம் ஓர் வரம் கேட்டார்களாம், அது என்னவென்றால், “நான் மலடியாக இறக்க கூடாது என்றும், குழந்தைப் பிறந்தப் பிறகு வேண்டுமானால், “நீ  எடுத்துக்கொள் என்று கேட்டார்களாம். அதற்கு அன்னை கருமாரி, அந்த பெண்ணிற்கு, “சரி அப்படியே அகட்டும் என்று கனியுடன் திருநீரை அள்ளிக்கொடுத்துவீட்டார்களாம். அவ்வாறே அடுத்த ஆண்டு, அந்த பெண்மணிக்கு ஒரு குழந்தைப் பிறந்தது. அந்த பெண்மணி கோவிலுக்கு வந்து, மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகளின்  திருமுடிமீது எழுந்தருளிய அன்னையின் பாதத்தில் குழந்தையை வைத்து, அன்னையேநீ எனக்கு கொடுத்த வாக்கு, பலித்துவிட்டது என்று ஆனந்தக் கண்ணீருடன் நின்ற பெண்ணிடம், “அன்னை கருமாரி மகளே, நீ கொடுத்த வாக்கை மறவாதேஎன்று கூறி, கனியுடன் திருநீரை அள்ளிக் கொடுத்தாள் தேவிகருமாரி. ஓர் ஆண்டு சென்றபிறகு, அந்த குழந்தையின் மேல் முத்து முத்தாகத் தோன்றினால் அன்னை கருமாரி. குழந்தையுடன் கோவிலுக்கு வந்த பெண், மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகளின்  திருமுடிமீது எழுந்தருளிய அன்னையின்  பாதத்தில் குழந்தையை வைத்து, குழந்தைக்கு உயிர்ப் பிச்சை வேண்டுமென்று மடியெந்தி நின்றாள் அந்த பெண். அதற்கு அன்னை கருமாரி, அன்று நீ கேட்ட வரத்தினை நான் அளித்தேன், அதன்படி நடக்கிறது. இதில் நான் ஒன்றும் செய்ய இயலாது. என்று உரைத்தாள் அன்னை கருமாரி. அதன்பிறகு அன்னை உரைத்த வாக்கு, “யாராக இருந்தாலும் வரம் கேட்க்கும்போது, சிந்தித்து தெளிவாக கேட்க்க வேண்டும்என்றும், அவசரகதியில் கேட்டுவிட்டு, அதன்படி நடக்கும்போது, அழுதுப்புலம்புவதில் பயன் ஒன்றுமில்லைஎன்று எடுத்து விலக்கினால் அன்னை கருமாரி. அதன்பிறகு அந்த குழந்தை அன்னையின் திருவடிகளை அடைந்துவிட்டது என்று செய்தி வந்ததாம்.



        தெய்வதிரு. தம்பு ஸ்வாமிகளின் தலைமுறையில், தெய்வதிரு. தம்பு ஸ்வாமிகளுக்கு பின்பு, அவரின் இளைய மகனான திரு. பரமானந்தம் திருமுடியில் எழுந்தருளிய அன்னை கருமாரி,  தவத்திரு. தம்பு ஸ்வாமிகள் உருவாக்கிய கோவிலில் (தற்போது பெரிய கோவில்) குறி உரைத்து கொண்டிருந்தபோது, மருளாளர் திரு. பரமானந்தம் ஸ்வாமிகளுக்கும் திரு. ராமதாஸ் அவர்களுக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, இக்கோவில் 1962 ஆம் ஆண்டு திரு. ராமதாஸ் அவர்களின் முயற்சியின் காரணமாக இந்து அறநிலைய துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன்பின்பு மருளாளர் திரு. பரமானந்தம் ஸ்வாமிகள் இக்கோவிலிருந்து இந்து அறநிலைய துறையினரால் வெளியேற்றப்படுகிறார்கள். அதன்பிறகு மருளாளர் திரு. பரமானந்தம் ஸ்வாமிகள் ஆற்றுமேட்டில் கோவில் அமைத்து, கருமாரியம்மனின் ஆதி உருவமான "கரகங்கள்" பிரதிஷ்டை செய்து, அன்னை கருமாரி எழுந்தருளி, தன்னை நாடி வந்த மக்களுக்கு குறி உரைத்து காத்து வந்துள்ளால் தேவி கருமாரி. இந்த நிலையில், திருவேற்காட்டில் மருளாளர் திரு. பரமானந்தம் ஸ்வாமிகளின் திருமுடியிலும், வேலப்பன்சாவடியில் மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகளின்  திருமுடியிலும் எழுந்தருளிய அன்னை கருமாரி, தன்னை நாடி வந்த மக்களுக்கு குறி உரைத்தும், குறைகளைத் தீர்த்தும் காத்து வந்துள்ளால் தேவி கருமாரி.


      1962 ஆம் ஆண்டு இறுதியில், மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகளின்  திருமுடியில் குடிக்கொண்ட அன்னை கருமாரி, தன்னை அடிபணிந்த அனைத்து மக்களுக்கு தெய்வ வாக்கு உரைத்து பின்பு கடைசியில் உரைத்த வாக்கு, "என் முடி பாலகனை அழைத்து கொள்ள போகிறேன்" என்று. இவ்வாக்கினைக் கேட்டு, அன்று குறி கேட்க வந்த அனைத்து மக்களும், தொண்டு செய்பவர்களும் அழுதுக்கொண்டே, அன்னையிடம் கேட்டது, "சிறுவயது பாலகனச்சே, என்னம்மா இந்த முடிவு?". அதற்கு அன்னை கருமாரியம்மன் ஒன்றும் கூறாமல் மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகளின்  திருமுடியிலிருந்து மலையெரினால் தேவி கருமாரி. இதற்கு விடை தெரியாமல், குழம்பிய நிலையில், அப்போதைய பூசாரியான மதிப்பிற்குரிய திரு. முனுசாமி அவர்களும், மதிப்பிற்குரிய திரு. சின்னையா அவர்களும், அப்போதே மறுபடியும் அன்னை கருமாரியம்மனை அழைத்தார்களாம். ஆனால் அன்னை கருமாரி வரவில்லை. அன்னை கருமாரி வாக்கு உரைத்தது ஞாயிற்றுக்கிழமை, இதே வாரத்தில், செய்தி வந்ததாம், மருளாளர் திரு. பரமானந்தம் ஸ்வாமிகள் அன்னை கருமாரியின் திருவடிகளை அடைந்தார்கள் என்று. தெய்வதிரு. தம்பு ஸ்வாமிகளின் தலைமுறையில், மருளாளர் திரு. பரமானந்தம் ஸ்வாமிகளின் (நான்காம் தலைமுறை) வாரிசும், மகனுமான திரு. புண்ணியகோட்டி அவர்களின் திருமுடியில் குடிக்கொண்டாள் அன்னை கருமாரி. அதன்பிறகு ஆற்றுமேட்டிலுள்ள கோவிலில் (தற்போது பரம்பரை குறிமேடை), மருளாளர் திரு. புண்ணியகோட்டி ஸ்வாமிகளின் (ஐந்தாவது தலைமுறை) திருமுடியில் அன்னை கருமாரி எழுந்தருளி, தன்னை நாடி வந்த மக்களுக்கு குறி உரைத்தும், குறைகளைத் தீர்த்தும் காத்து வந்துள்ளால் தேவி கருமாரி.

    

      அன்னை கருமாரி மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகளின்  திருமுடிமீது எழுந்தருளி, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில் எட்டிமரத்தடியில் நின்று குறி உரைப்பது, அதாவது, "எட்டிமரக்குறி" என்பது அன்றைக் காலத்தில் மிகவும் புகழ் பெற்று விலங்கியது என்றும், இன்றும் அன்று எட்டிமரக்குறி கேட்டவர்கள் அதன் அருமையையும், சிறப்பையும் நன்கு அறிவார்கள் என்று பெருமாளகரம் ஊர் மக்கள் கூறுகின்றனர்.

   

      ஆற்றுமேட்டிலுள்ள கோவிலில்  மருளாளர் திரு. புண்ணியகோட்டி ஸ்வாமிகளின் திருமுடியில் அன்னை கருமாரி எழுந்தருளி, தன்னை நாடி வந்த மக்களுக்கு குறி உரைத்தும், குறைகளைத் தீர்த்தும் காத்து வந்துள்ளால் தேவி கருமாரி. இவ்வாறாக சில ஆண்டுகள் சென்றபிறகு, மருளாளர் திரு. புண்ணியகோட்டி ஸ்வாமிகளுக்கும் அவருடைய சகோதரர்களுக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, மருளாளர் திரு.புண்ணியகோட்டி ஸ்வாமிகள் ஆற்றுமேட்டிலுள்ள பரம்பரை குறிமேடையிலிருந்து வெளியேறி, அருகாமையிலுள்ள கோண்டித்தொப்பில் கோவில் அமைத்து, மருளாளர் திரு. புண்ணியகோட்டி ஸ்வாமிகளின் திருமுடியில் அன்னை கருமாரி எழுந்தருளி, தன்னை நாடி வந்த மக்களுக்கு குறி உரைத்தும், குறைகளைத் தீர்த்தும் காத்து வந்துள்ளால் தேவி கருமாரி. தற்போது இத்தலம் "புண்ணியகோட்டி சுவாமிகள் குறிமேடை" என்று விளங்குகிறது. மருளாளர் திரு. புண்ணியகோட்டி ஸ்வாமிகளின் சகோதரர் திரு. சுந்தரம் பூசாரி அவர்கள், இக்கோவிலுக்கு மருளாளர் வேண்டும் என்று நினைத்ததின் காரணமாக, தன் சகோதரியான திருமதி. மாரியம்மாள் அழைத்து, அவர்களுக்கு செய்யவேண்டிய முறைகளை செய்து, கருமாரியம்மனை முடி இறக்கி வைத்தார்களாம். அதன்பிறகு, ஆற்றுமேட்டிலுள்ள பரம்பரை குறிமேடையில் அன்னை கருமாரி, அந்த திருமுடியில் குடிக்கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு குறி உரைத்து காத்து வருகிறாள் தேவி கருமாரி.

 

       வேலப்பன்சாவடியில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவிலில் 1955 ஆம் ஆண்டு முதல், மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகளின்  திருமுடியில் குடிக்கொண்ட அன்னை கருமாரி குறி உரைத்துக்கொண்டிருந்த நிலையில், 1967 ஆம் ஆண்டு மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகளுக்கும், கோவில் நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்ட மனகசப்பின் காரணமாக மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகள் இக்கோவிலை விட்டு வெளியேறிவிட்டார்கள். இகோவிலில் அன்னை கருமாரி உரைத்த கடைசி வாக்கு, "இம்முடி பாலகனால் கோவில்கள் உருவாகும் என்றும், இறுதியில் இம்முடி பாலகன் மீண்டும் இக்கோவிலுக்கு வந்து வாக்கு உரைத்து நிலைத்து நிற்ப்பான் என்றும், அதன்பிறகு இப்பாலகனை என் திருவடிகளை வந்து அடைவான்" என்று வாக்கு உரைத்துள்ளால் அன்னை கருமாரி. மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகள் இருக்கும்வரை இக்கோவிலில் அன்னை கருமாரியம்மன்னுக்கு உருவமாக "கரகம்" தான் இருந்தது என்பதே உண்மையே.


        அன்னை கருமாரியம்மனின் வாக்கின்படி, மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகள், தனக்கு சொந்தமான கோவில் வேண்டுமென்று நினைத்து, வேதபுரீஸ்வரர் கோவிலின் இடது பின்புறம் உள்ள இடத்தை தனது சொந்த செலவில் 1967 ஆம் ஆண்டு வாங்கி, தனது சொந்த செலவில் கூரை அமைத்து, கருமாரியம்மனின் ஆதி உருவமான "ஏழு கரகங்கள்" வைத்து கோவிலை உருவாக்கிவுள்ளார் மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகள். இக்கோவிலில் குடிக்கொண்டிருக்கும் அன்னை கருமாரி, மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகளின் திருமுடியில் எழுந்தருளிய அன்னை கருமாரியிடம், குறிக் கேட்பதற்காக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரு நாள் முன்னரே வந்து கோவில் மற்றும் கோவிலின் எதிரிலுள்ள புளியமரத்தடியில் தங்குவார்களாம். இக்கோவிலில் மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகளின் திருமுடியில் எழுந்தருளிய அன்னை கருமாரியிடம் குறி கேட்பதற்காகவே ஒவ்வொரு வாரத்திலும் சுமார் மூன்றாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வந்துள்ளார்களாம். இக்கோவிலுக்கு வரும் பெரும் திரளான பக்தர்களை பார்த்த பேருந்து நிறுவனத்தார்கள், முதன் முதலாக திருவேற்காட்டிற்கு பேருந்து விட்டார்களாம். ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரண்டு அல்லது மூன்று முறை பேருந்துகள் விடப்பட்டது என்று ஊர் வரலாறு தெரிந்தவர்கள் கூறுகின்றனர்கள்.


ஒரு சமயம், மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகளின்  திருமுடிமீது எழுந்தருளும் அன்னை கருமாரியிடம் குறி கேட்க வந்த பெண்மணி, கோவிலுள்ள இருந்த கிணற்றிலிருந்து தண்ணிரை தலைக்கு ஊற்றிக்கொண்டு, பயபக்தியுடனும், ஈர சேலையுடனும் கோவிலைச் சுற்றிவிட்டு, அன்னையிடம் குறி கேட்க, கோவிலினுள் வந்து நின்றுக்கொண்டிருந்த பெண்ணை அழைத்து அன்னை உரைத்த வாக்கு, “மகளே, மகன் காணாமல் போய்விட்டான், எங்கு தேடியும் கிடைக்கவில்லை,  அவன் உயிருடன் இருக்குகிறானா?. கிடைப்பானா?. என்று கேட்க்க வந்துள்ளாய். அதற்கு அந்த பெண், “ஆமாம்மா தாயே”. அடுத்து அன்னை உரைத்த வாக்கு, “உன் மகன் உயிருடன் இருக்கிறான், நீ வீடு சென்று சேருவதற்குமுன்னால் உன் மகன் வீட்டில் இருப்பான்என்று. அதேபோல் இவர்கள் வீடு சென்று பார்த்தபோது காணாமல் போன மகன் வீட்டிருந்தாராம். அடுத்த வாரம் வந்த பெண்மணி, தான் பிராத்தனை அன்னையிடம் செலுத்திவிட்டு சென்றார்களாம்.  


      இவ்வாறாக சில ஆண்டுகள் சென்றபின், 1974 ஆம் ஆண்டு, மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகளுக்கும், அவருடைய சொந்தகாரகளுக்கும் இடையே ஏற்பட்ட மனகசப்பின் காரணமாக, இக்கோவிலிருந்து மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகள் வெளியேறிவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. தற்போது இக்கோவில் இந்து சமய அறநிலை துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.


இன்று குறிமேடை என்றால் திருவேற்காடு என்னும் அளவிற்கு பெயருக்கும், புகழுக்கும் வித்திடவர் மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகள்.


1974 ஆம் ஆண்டு முதல் குன்றத்தூரை அடுத்த சிறுகளத்தூரில் கோவில் அமைத்து, கருமாரியம்மனின் ஆதி உருவமான "ஏழு கரகங்கள்பிரதிஷ்டை செய்து, இக்கோவிலில் குடிக்கொண்டிருக்கும் அன்னை கருமாரி, மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகளின் திருமுடியில் எழுந்தருளி, தன்னை தஞ்சமடைந்த மக்களுக்கு குறி உரைத்து காத்து வருகிறாள் அன்னை கருமாரி. தற்போது இக்கோவில் வளர்ந்து ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருத்தலம், ஆதி தலைமுறை குறிமேடை என்று விளங்கிக்கொண்டிருக்கிறது.


இவ்வாறாக பல ஆண்டுகள் சென்றபிறகு, 2003 ஆம் ஆண்டு, மருளாளர் திரு. புண்ணியகோட்டி ஸ்வாமிகள் அன்னை கருமாரியம்மனின் திருவடிகளை அடைகிறார்கள். அதன்பின்பு மருளாளர் திரு. புண்ணியகோட்டி ஸ்வாமிகளின் மகனான திரு. மதுரமுத்து அவர்களின் திருமுடியில் எழுந்தருளியுள்ளால் அன்னை கருமாரி. அது முதற்கொண்டு, மருளாளர் திரு. மதுரமுத்து ஸ்வாமிகள் திருமுடியில் எழுந்தருளி, தன்னை நாடி வந்த மக்களுக்கு குறி உரைத்தும், குறைகளைத் தீர்த்தும் காத்து வருகிறாள் தேவி கருமாரி.


இவ்வாறாக, குன்றத்தூரை அடுத்த சிறுகளத்தூரில், மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகளின் திருமுடியில் எழுந்தருளியும், திருவேற்காடு ஆற்றுமேட்டியில் மருளாளர் திருமதி. மாரியம்மாள் ஸ்வாமிகளின் திருமுடியில் எழுந்தருளியும், திருவேற்காடு கோண்டித்தொப்பில் மருளாளர் திரு. மதுரமுத்து ஸ்வாமிகளின் திருமுடியில் எழுந்தருளியும் தன்னை நாடி வரும் அனைத்து மக்களுக்கு குறி உரைத்தும், குறைகளைத் தீர்த்தும் வரங்கள் அளித்தும் காத்து வருகிறாள் கலியுகத்தின் பேசும் தெய்வமாகிய ஸ்ரீ தேவி கருமாரியம்மன்.


இவர்களுடைய தலைமுறையில், மருளாளர் திரு. தேவானந்தம் ஸ்வாமிகள் நான்காவது தலைமுறையிலும்,  மருளாளர் திருமதி. மாரியம்மாள் ஸ்வாமிகள் ஐந்தாவது தலைமுறையிலும், மருளாளர் திரு. மதுரமுத்து ஸ்வாமிகள் ஆறாவது தலைமுறையிலும், கலியுகத்தின் பேசும் தெய்வமான அன்னை கருமாரி இவர்களின் திருமுடியில் குடிக்கொண்டு, தன்னையே தஞ்சமென நாடிவரும் அனைத்து மக்களுக்கும் குறி உரைத்தும், குறைகளைத் தீர்த்தும், தீராத நோய்களைத் தீர்த்தும் காத்து வருகிறாள் ஸ்ரீ தேவி கருமாரியம்மன்.


சுபம்.

இப்படிக்கு

கருமாரி மைந்தன்


No comments: